Posted on

 

சங்கீதன்

வரலாற்றுச் சாதனைகள் பல படைத்த தலைசிறந்த புலனாய்வுத் தளபதி விநாயகம்.

எமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

தமிழீழ இலட்சியத்துக்கான நீண்ட நெடிய போராட்டப் பயணத்திலே எமது விடுதலை இயக்கம் பல அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கின்றது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கின்றது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு புலனாய்வுத்துறையின் பங்கு அளப்பரியது. புலனாய்வுத்துறையின் பல தாக்குதல்களுக்கும், நடவடிக்கை களுக்கும் நடுநாயகமாக நின்று, எதிரியின் கோட்டைக்குள் புலனாய்வுப் படையணிகளை நெறிப்படுத்தி, வழிநடத்தி சமராடிய சரித்திரம் மறக்க முடியாத வரலாறு படைத்த தலைசிறந்த புலனாய்வுத் துறையின் மூத்த தளபதி “விநாயகம்” 04.06.2024 அன்று பிரான்சில் உடல் நலக்குறைவு காரணமாக சாவடைந்தார்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைத்த மூத்த தளபதி விநாயகம் அவர்கள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கி உலகத்தையே எமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அத்துடன் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் அசைவின் துடிப்பறிந்து பல்வேறு தாக்குதல்களை நெறிப்படுத்தி, வெற்றிக்கு வழி சமைத்தவர். தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்து செயற்பட்டவர்.

தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, அந்த மண்ணின் விடிவிற்காக தன்னையே இறுதி மூச்சு அடங்கும் வரை உருக்கி, உறுதியாக உழைத்த ஒர் இலட்சிய நெருப்பு, இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்ற முடியாத துயரத்திலும், வேதனையிலும் மூழ்கிக்கிடக்கின்றது. “உன்னத இலட்சியத்துக்காக உயிர் நீத்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை. நமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு” எனும் எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கு அமைய தமிழ் மக்கள் அனைவரதும்
மனங்களில் சரித்திரம் மறக்காத வரலாறு படைத்த தலை சிறந்த மூத்த தளபதி மாவீரன் விநாயகம் அவர்கள் என்றென்றும் வாழ்வார், விநாயகம் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினராகிய நாம் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வேளையில் இவரது பிரிவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் மற்றும் அவருடன் களமாடிய போராளிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக்கொள்கிறோம்.

மாவீரன் விநாயகம் அவர்கள் எம்மை விட்டு எங்கும் போய்விடவில்லை, எமது தேசத்தின் விடுதலைக்காக எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவர் என்றும் எமக்குள் எரிந்து கொண்டிருப்பார்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 

PDF

தளபதி விநாயகம் அவர்களுக்கான இரங்கல் அறிக்கை 2024 06.06

காணொளி பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *