விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் “மாமனிதர்” வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா,
தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக தேச விடுதலையை வரித்துக் கொண்டு அந்த இலட்சியத்திற்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் 16.06.2024 அன்று இழந்துவிட்டது.
தாயகத்தின் விடுதலைக்காக ஒளிர்ந்த சுதந்திர சுடர் ஒன்று நிரந்தரமாகவே அணைந்துவிட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப் பாட்டுக்காகவும் சுகாதார நலன்களுக்காகவும் ஓயாது உழைத்த ஒரு உன்னத மனிதரை இழந்து தமிழர் தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கிறது.
மூத்த வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா ஐயா அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். உயர்ந்த குணவியல்புகள் கொண்டவர். நேர்மையும், கண்ணியமும் மிக்கவர். அனைவரையும் கவர்ந்து கொள்ளும் ஆளுமை படைத்தவர். தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு மதிக்கப்பட்ட ஒரு தேசப்பற்றாளர். இவரது இழப்பு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
ஆரம்பத்தில் 27.10.1982 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் சாவகச்சேரி போலீஸ் நிலையம் தாக்கப்பட்டது. அதில் மூத்த தளபதி லெப்ரினன்ட் சீலன் உட்பட 3 போராளிகள் காயமடைந்திருந்தனர். இவர்களுக்கு வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா சிகிச்சை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்து பின் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
1984 ஆம் ஆண்டு போராளிகளின் தலைமையில் சிறைச்சாலை உடைக்கப்பட்டு, வைத்தியர் ஜெயகுலராஜா உட்பட எமது இயக்க ஆதரவாளர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
தமிழகத்திற்கு வருகை தந்த வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், மற்றும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து செயற்பட தொடங்கினார். சமகாலத்திலேயே தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், போரின் கொடிய வடுக்களிலிருந்து மக்களுக்கு உதவுவதற்காக தமிழர் புனர்வாழ்வு கழகத்தை உருவாக்கும் பணியை அவரிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உருவாக்கத்தில் அவரின் வகிபாகம் மிகக்காத்திரமாக இருந்தது.
பின்னர் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா எமது அமைப்பால் உருவாக்கப்பட்ட தமிழீழ மருத்துவக் கல்லூரியின் முதல் பீடாதிபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டார். 1995இல் யாழ்ப்பாண வரலாற்று இடம்பெயர்வுக்குப் பின் தனது சொந்த ஊரான தண்ணீரூற்று பிரதேசத்தில் வசித்து வந்தார். அந்த காலப்பகுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவராக பணிபுரிந்ததுடன், தான் வசித்த இடத்தில் சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்துடன் மக்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வந்தார்.
2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் முல்லைதீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா நியமிக்கப்பட்டார். அதன் பின் முல்லைதீவு மாவட்டத்திற்கு மிகச் சிறப்பான முறையில் மருத்துவசேவை வழங்க அரும்பணியாற்றினார்.
தமிழீழ மருத்துவத் துறையின் வேண்டுதலுக்கு அமைவாக முல்லைதீவு மாவட்ட வைத்திய சாலையை இப்போது இயங்கி வருகின்ற மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றினார். கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாஞ்சோலை வைத்திய சாலைப் பணி ஓரளவு முழுமை பெற்றது. 1997 ஆம் ஆண்டில் இருந்து வெண்புறா அமைப்பின் தலைவராகவும், இனிய வாழ்வு இல்லத்தின் தலைவராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 மே மாதம் மௌனிக்கும் வரையும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு சிறப்பாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் போராளிகள், மாவீரர்கள் மற்றும் தமிழீழ மக்களையும் மிக ஆழமாகவும் ஆத்மார்த்தமகவும் நேசித்தார். தமிழ் தேசிய கட்டமைப்பு, பலம் பெற்று வளரவும் அயராது உழைத்தார். இவரது பெரும்பணி என்றும் பாராட்டுதற்குரியது. இந்த வகையில் தமிழீழ தேச விடுதலைக்காக மிக நீண்ட காலமாக தொடந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஓர் சுதந்திரச்சுடர் 16.06.2024 அன்று உடல் நலக்குறைவால் தனது 81 வயதில் மானுட வாழ்வை துறந்து, தான் நேசித்த மண்ணையும் மக்களையும் விட்டு நிரந்தரமாகவே அணைந்து விட்டது.
வைத்திய கலாநிதி ஜெயகுலராஜா அவர்களின் இனப் பற்றுக்கும், விடுதலை பற்றுக்கும் மதிப்பளித்து அவரது விடுதலைப் பணியை மதிக்கும் வகையில் “மாமனிதர்” என்ற அதி உயர் தேசிய விருதை அவருக்கு வழங்கி மதிப்பளிக்கின்றோம். “சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்” எனும் தேசியத்தலைவரின் கூற்றுக்கு அமைய மாமனிதர் கலாநிதி ஜெயகுலராஜா அவர்கள் என்றென்றும் எம்மத்தியில் வாழ்வார்.
அவரது பிரிவால் துயருற்றிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் அவர் நேசித்த தமிழீழ மக்கள் அனைவரது துயரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் ஆகிய நாம் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.
நன்றி
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
.
வி. ஜெயாத்தன்
பொறுப்பாளர்
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்.
.
PDF
.
காணொளி பதிவு