புரட்சிக்கலைஞர் ‘கப்டன்’ விஜயகாந்த் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இரங்கல் செய்தி.
கடந்த 28 டிசம்பர் 2023 அன்று சுகயீனம் காரணமாக மறைந்த புரட்சிக்கலைஞர் “கப்டன்” விஜயகாந்த் அவர்களுக்கு
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையால் அதன் தற்போதைய பொறுப்பாளர் திரு.வி.ஜெயாத்தன் அவர்களின் கையொப்பமிட்ட இரங்கல் அறிக்கை, 03.01.2024 அன்று புதன்கிழமை மாலை அவரது மனைவி, பிள்ளைகளிடம் தமிழகம்-சென்னையில் அவர்களது இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் துணைவியார் திருமதி.பிரேமலதா, மகன்களான விஜய-பிரபாகரன், சண்முக-பாண்டியன் மற்றும் திருமதி.பிரேமலதா அவர்களின் சகோதரர் திரு.சதீஷ் ஆகியோர் உட்பட தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் நிறைவில் கடந்த காலங்களில் “புரட்சிக் கலைஞர்” எவ்வாறு தமிழீழ மக்களின் போராட்டத்திற்கும் அவர்களுடைய சுதந்திர வாழ்க்கைக்கும் துணை நின்றாரோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடர்ந்து தேசிய திராவிட முற்போக்கு கழகம் செயற்படும் என்று அதன் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா அவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எப்போதெல்லாம் நியாயப்பாடுகளுடன் கூடிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்காக முழு உலகும் பாடுபடும், அது போல அவற்றுக்கான ஆதரவும் உலகம் முழுவதிலுமிருந்தும் கிடைக்கும். அவ்வாறுதான் தமிழீழ போராட்டத்திற்காக தமிழகத்திலிருந்து எழுகின்ற ஆதரவுக் குரல்களும், உதவிகளும் காலம் காலமாக வெவ்வேறு தலைவர்களாலும், மக்களாலும் தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கிற விடயமாகும்.
அவ்வாறு தமிழீழப் போராட்டத்திற்காக இதயசுத்தியுடன் பல ஆண்டுகளாக ஒலித்து வந்த குரல் விஜயகாந்த் அவர்களுடையதாகும். சிறந்த நடிகர், வெற்றிகரமான அரசியல் தலைவர், சிறந்த மனிதர், மிகச்சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர் என்கிற பல் பரிமாணங்களைக் கொண்ட அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக, தமிழீழ மக்களுக்கும் பல்வேறு வழிகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தனிப்பட்ட நலன்கள் மற்றும் தமது அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் அவர்கள் தொடர்ச்சியாக தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவுக் குரலாக ஒலித்து வந்ததுடன் ஈழத் தமிழ் மக்கள் மேல் உண்மையான கரிசனை கொண்டிருந்தார்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்பதனை வெளிப்படையாக பேசியிருந்தார்.
தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைக்கு உள்ளாகியபோதும் தமது தாயக விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழ் மக்களுக்கு விஜயகாந்த் அவர்களது மரணம் ஈடுசெய்ய முடியாததாகும்.
என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை முழு வடிவமும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
கப்டன் விஜயகாந்த் இரங்கல் செய்தி (PDF)