“முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தொடர்ச்சிக்குள் தமிழ் தேசத்தை மீட்டெடுப்போம்.”
என தமிழீழ அரசியல் துறையினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் சார்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை 18.05..2023 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து அவ் அறிக்கையில்,
உரிமைக்காக போராடிய தமிழினம் தனது இருப்புக்காக இறுதிவரை போராடிய களம் முள்ளிவாய்க்கால். இக்களத்தை குருதிவாய்க்கால் ஆக்கிய சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்ள 14 ஆண்டுகளாக போராடி வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்கு சர்வதேச நீதிகோரி தன்னிச்சையாக கிளர்ந்தெழும் மக்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்ட ஆக்கிரமிப் புக்களை தமிழர் தாயகத்தில் மேற்கொள்வதன் மூலம் மடைமாற்றம் செய்வதனூடாக, தமிழ் மக்கள் தமது நியாயமான அரசியல் உரிமை களுக்காக போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழரின் பிரதான அரசியல் உரிமைக்கோரிக்கை பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றது. இதை உணர்ந்து தமிழ்மக்களும், அரசியல் தலைமைகளும் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்த காலகட்டத்தில் புலம்பெயர் சமூகமும், தாயக தலைமைகளும் தன்னிச்சையான செயற்பாடுகளை தவிர்த்து, ஒன்றுபட்ட இலக்கு நோக்கி பயணிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகின்றது. எமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்து தொடரக்கூடிய பயணமே தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு விடிவைத் தேடித்தரும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளுக்காய் இன்றைய நாளில் ஏற்றப்படும் ஈகைச்சுடரின் ஒளியில் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விரைந்து செயற்படுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம். என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.